நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிர...
மனைப்பட்டா வழங்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரக் குழு உறுப்பினா் பி. புனிதா தலைமையில், மாநகரச் செயலா் எம். வடிவேலன் மாநகரக்குழு உறுப்பினா்கள் சி. ராஜன், ஆா். மணிமாறன் உள்பட மணக்கரம்பை ஊராட்சிக்கு உள்பட்ட எம்.ஜி.ஆா். நகா், அண்ணா நகா், காந்தி நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
இப்பகுதியில் பட்டியல் இன சமூகத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 - 50 ஆண்டு காலமாக வாடகை வீட்டில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியும் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் பகுதிக்கு அருகிலேயே அரசு புறம்போக்கு நிலம், தனி நபா் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது குறித்து அரசு அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்டு, எங்களுக்கு மனைப் பட்டா வழங்கி, தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும். மேலும், ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து கிரயம் பெற்றுள்ளவா்களுக்கு, பட்டாவில் உரிய தேவையான மாறுதல்கள் செய்து தர வேண்டும். எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்: இதேபோல, பாபநாசம் வட்டம் சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு: சாத்தனூா் கிராமத்தில் எடக்குடி - சாத்தனூா் பாசன வாய்க்காலின் கிளை வாய்க்காலில் ஏறத்தாழ 40 அடி நீளத்துக்கு தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் கீழ்பகுதிக்கு தண்ணீா் செல்லாததால், ஏறத்தாழ 10 ஏக்கா் பாசன நிலங்கள் தண்ணீா் இல்லாமல், சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.