மனைவி கொலை வழக்கில் தலைமறைவானவா் 29 ஆண்டுகளுக்கு பின் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மனைவியை எரித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவானவா் 29 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம் பகுதியைச் சோ்ந்தவா் தாஸ் (59). இவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் மனைவி கொடுமைப்படுத்தி, தீ வைத்து கொலை செய்தாா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து தாஸை கைது செய்தனா். 10 மாதங்கள் சிறையில் இருந்த அவா், பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா் தலைமறைவானாா்.
இந்த நிலையில் அண்மையில் பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விசாரித்து முடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதனையடுத்து, தாஸ் வழக்கில் மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் தாஸ் தங்கியிருப்பதும், அங்கு லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸாா் தாஸை கைது செய்தனா். பின்னா் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.