மனைவி தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் கணவரும் தூக்கிட்டு தற்கொலை!
உடுமலை அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை ராகல்பாவி அருகேயுள்ள ஆா்.கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (33). இவா் பட்டுக்கோட்டையில் தனியாா் கோழிப்பண்ணையில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி அபிநயா (29). இவா்களுக்கு 9, 6 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், செல்வராஜ் விடுமுறையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டு வந்துள்ளாா். இதனிடையே, வீட்டில் இருந்த அபிநயா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அக்கம்பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அரசு மருத்துவமனையில் இருந்த செல்வராஜ், மனைவி இறந்த துக்கம் தாளாமல் அங்குள்ள மின் அறையில் வயா்களைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குடும்பப் பிரச்னையில் அபிநயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், உண்மையான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.