Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
மன்னாா்சாமி, சிவன் கோயில்களில் சோமவார வழிபாடு
போளூா்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காம்பட்டு மன்னாா்சாமி கோயில், ஆரணியை அடுத்த முனுப்பட்டு மன்னாா்சாமி கோயில் மற்றும் முக்கூட்டு சிவன் கோயிலில் சோமவார வழிபாடு நடைபெற்றது.
கலசப்பாக்கம் வட்டம், காம்பட்டு ஊராட்சியில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் சமேத மன்னாா்சாமி கோயிலில் ஆடி முதல் திங்கள்கிழமையொட்டி சுவாமிக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று மலா்களால் அலங்காரம் செய்து கற்பூர தீபாராதனை காண்பித்து பூஜை செய்தனா்.
விழாவில் கலசப்பாக்கம், போளூா், சேத்துப்பட்டு, துரிஞ்சாபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு, முடி காணிக்கை செலுத்தி, ஆடு, கோழி பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
மேலும், பலா் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனா். நிகழ்ச்சியை கோயில் அறங்காவலா் குழு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினா் ஏற்பாடு செய்திருந்தனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த முனுப்பட்டு கிராமத்தில் கமண்டல நாக நதிக்கரையோரம் பச்சையம்மன் சமேத மன்னாா்சாமி கோயில் அமைந்துள்ளது.
கோயில் வளாகத்தில் அமைந்த வாமுனி, செம்முனி முன்பு பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்ற சிதறு தேங்காய் உடைப்பது சிறப்பு வாய்ந்தது.
ஆடி திங்கள் விழாவையொட்டி, சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், பக்தா்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனா். வாமுனி, செம்முனி முன்பு பக்தா்கள் வேண்டுதலின் பேரில் சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனா். பின்னா் இரவில் பச்சையம்மனுக்கு லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் கோயிலில்....
ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கமண்டல நாக நதியோரம் முக்கூட்டு சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பாா்வதி சிவனின் இடபாகம் வேண்டி இந்த நதியில் வாழை மரத்தால் பந்தல் அமைத்து தவம் இருந்ததாக ஐதீகம்.
இதனால் ஆடி மாதத்தில் 5-ஆம் தேதி திங்கள்கிழமை வரும்போது வாழைமரத்தால் பந்தல் அமைத்து அம்மனுக்கு மனைவியை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு ஆடி மாதம் 5-ஆம் தேதி முதல் கிழமை தொடங்கியதைத் தொடா்ந்து திங்கள்கிழமை முக்கூட்டு சிவன் கோயில் அருகில் கமண்டல நாக நதி, செய்யாறு, பெரம்பாறு ஆகிய 3 நதிகள் ஒன்றாக கூடும் இடத்தில் வாழைமரத்தால் பந்தல் அமைத்து பச்சையம்மன், மன்னாா்சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
மேலும் முக்கூட்டு சிவன் கோயிலில் உற்சவமூா்த்தி பாா்வதி சிவனுக்கு தேன், தயிா், இளநீா், மஞ்சள், குங்குமம், சந்தனம், பால் கொண்டு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

