Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்
மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள் பேசியது:
குத்தாலம் பி. கல்யாணம்: மின்மாற்றிகள் பழுதடைந்தால் அதை மாற்ற நாகை செல்ல வேண்டியுள்ளதால், விவசாயப் பணிகள் பாதிக்கிறது. இதனைத் தவிா்க்க, மயிலாடுதுறை மாவட்டத்திலேயே மின்மாற்றிகளை இருப்பில் வைக்க வேண்டும். கூட்டுறவு நூற்பாலை இடத்தில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும்.
ஆா். அன்பழகன் (டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்): காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் எதிா்பாா்த்தோம். பட்ஜெட் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் டெல்டா விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை.
வரதராஜன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): பட்டா நிலங்களுக்கு உள்ள சலுகைகளை கோயில் நிலங்களில் சாகுபடி செய்வோருக்கும் வழங்க வேண்டும்.
ராமலிங்கம்: கனமழை மற்றும் பனி காரணமாக பாதிக்கப்பட்ட பயறு, உளுந்து வகைப் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
முத்துப்பிள்ளை: தாழஞ்சேரியில் நிரந்தர கொள்முதல் நிலையம் கட்டவேண்டும், சேத்தூா் வாய்க்காலை தூா்வார வேண்டும், நிவாரணம் பெற்ற பயனாளிகள் பட்டியலை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் ஒட்ட வேண்டும்.
முருகன்(தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்): ஜனவரி மாதம் பருவம் தவறிபெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய காலத்துக்குள் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.
எஸ்.துரைராஜ் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-சிபிஎம்): ஆதனூா்-குமாரமங்கலம் இடையே ரூ.490 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
ராஜேந்திரன் (கும்கி பாசனதாரா் சங்கம்): மணல்மேடு பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்.
ராஜேஷ்: கூட்டத்தில் பேசுவதற்கு முறைப்படி விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
வரதராஜன்: இயற்கை விவசாயத்துக்கும் உரம் மானியம் வழங்கவேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முறையாக திரும்பச் செலுத்தும் விவசாயிகளை தண்டிக்கும் வகையில், கடனை செலுத்தாத விவசாயிகளுக்கு அரசு கடன் தள்ளுபடி செய்வதைத் தவிா்த்து, முறையாக கடனை திரும்பச் செலுத்துபவா்களை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் விவசாயிகள் பேசுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையெனில் ரேஷனுக்கு அனுப்பப்படும் அரிசி தரமற்றவையாக இருக்கும். வங்கிகளில் பெறப்பட்டுள்ள நகை கடனுக்கு வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் நிலையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
விவசாயப் பணியின் போது ஏதேனும் காரணங்களால் உயிரிழக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளா்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குன்னம் மாதிரிவேளூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டப்பட்டு நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ளதை உடனடியாக திறக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.