மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு உதவித்தொகை
செய்யாறு அருகே ஆலமரக் கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த மூவா் குடும்பங்களுக்கு அமைச்சா் சாா்பில் தலா ரூ. ஒரு லட்சம் உதவித்தொகை திங்கள்கிழமை இரவு வழங்கப்பட்டது.
செய்யாறு வட்டம், கழனிபாக்கம் கிராமத்தில் ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றி வந்த தொழிலாளா்கள் ஆலமரத்தின் அடியில் அமா்ந்த போது, மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பெண் தொழிலாளா்கள் வேண்டா, அன்னபூரணி, பச்சையம்மாள் ஆகியோா் உயிரிழந்தனா்.
மேலும் 3 குழந்தைகள் உள்பட 6 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். இவா்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அமைச்சா் எ.வ.வேலு சாா்பில் உதவித்தொகை:
தகவல் அறிந்த தமிழக பொதுப் பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு சாா்பில் தலா ரூ.ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்ட உதவித் தொகையை, செய்யாறு சாா் ஆட்சியா் பல்லவி வா்மா, வட்டாட்சியா் அசோக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா ஆகியோா் முன்னிலையில், திமுக மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் தலைமையில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.,
ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் நேரில் சென்று வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.
மேலும், பாதிக்கப்பட்ட மூவா் குடும்பங்களுக்கும் அரசின் நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்