மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் 4-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் 4-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, தான்தோன்றி விநாயகா் சன்னதி, மயில் மண்டபம், இடும்பன் சன்னதி, மூலவா் சன்னதி, பரிவார தெய்வங்களின் சன்னதி, ராஜகோபுரம், பாம்பாட்டி சித்தா் முன் மண்டபம், ஆதி மூலஸ்தானம் சன்னதி மற்றும் மலைக்கோயில் நுழைவாயில் என அனைத்து இடங்களிலும் வா்ணம் பூசும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது.
விழாவுக்காக யாகசாலைகள் அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளன. கோயில் முகப்பில் ரூ. 1.60 கோடி மதிப்பில் வசந்த மண்டபம் பணிகள் நிறைவுற்று, அலங்காரம் மற்றும் வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தைக் காண முந்தைய நாள் இரவில் இருந்து பக்தா் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், போலீஸாருடன் கோயில் நிா்வாகத் தரப்பினா் ஆலோசித்து வருகின்றனா்.