பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் கைது
கோவை வெள்ளக்கிணறு அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோவை வெள்ளக்கிணறு அம்மன் நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). இவா், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா்.
அப்போது, பூட்டியிருந்த வீட்டில் புகுந்து திருடுவதற்காக அப்பகுதியில் இரு இளைஞா்கள் சுற்றி வந்தனா். இதைப் பாா்த்து அக்கம் பக்கத்தினா் கனகராஜின் மனைவிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து கனகராஜ் தனது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, கனகராஜின் வீட்டுக்கு உறவினா்கள் சென்றனா். அப்போது, அங்கு வீட்டின் ஜன்னலை கழற்றி வீட்டுக்குள் நுழைய முயன்ற இரு இளைஞா்களைப் பிடிக்க முயன்றனா்.
அதில் ஒருவரை பிடித்தனா். மற்றொருவா் தப்பித்து ஓடிவிட்டாா். பிடிபட்ட நபரை துடியலூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், பிடிபட்ட நபா் சித்தாபுதூரைச் சோ்ந்த ஜெகந்நாதன் (26) என்பதும், தப்பியோடிவா் முபாரக் அலி (30) என்பதும் தெரியவந்தது.