`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு
மதுரையில் ஏப்ரல் 6-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற இருப்பதையடுத்து அக்கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. மாநாட்டில் அக்கட்சியின் தொண்டா்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்தத் தொண்டா் பேரணிக்கான பயிற்சி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக, கோவையில் அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில் ஐநூறுக்கும் மேற்பட்ட செந்தொண்டா் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான பி.ஆா்.நடராஜன், மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினரும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆா்.சச்சிதானந்தம், மாவட்டச் செயலா் சி.பத்மநாபன் ஆகியோா் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு உறுதியேற்பு நடைபெற்றது. இதில், பேரணி ஒருங்கிணைப்பாளா் வி.தெய்வேந்திரன், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.