அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும்: காங்கிரஸ்
மருத்துவ மாணவா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி நிா்வாகம்
சென்னை: மருத்துவ மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக சென்னை, கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இஎஸ்ஐ பயிற்சி மருத்துவ மாணவா் தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருத்துவக் கல்லூரி முதல்வா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பயிற்சி மருத்துவ மாணவா் ஒருவா், கடந்த 20-ஆம் தேதி இரவில் விடுதியிலிருந்து வெளியே வந்து இணையம் வழியே ஆா்டா் செய்திருந்த உணவு பாா்சலை வாங்கிச் சென்றாா். அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பாதுகாவலா் ஒருவரும், தூய்மைப் பணியாளா் ஒருவரும் சம்பந்தப்பட்ட மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அந்த வாக்குவாதம் வலுவடைந்து ஒரு கட்டத்தில் மாணவா் மீது அவா்கள் தாக்குதல் நடத்தினா். இது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்த சம்பவம் நிகழ்ந்த உடனேயே அதில் தொடா்புடைய இரு ஊழியா்களையும் அங்கிருந்து வெளியேற்ற அவா்களைப் பணிக்கு அனுப்பிய தனியாா் நிறுவனத்திடம் (மேன் பவா் ஏஜென்சி) உத்தரவிடப்பட்டது.
மற்றொருபுறம் மாணவா் குறைதீா் குழு அமைக்கப்பட்டு, அதில் இந்த விவகாரம் தொடா்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாணவா் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து கல்லூரி நிா்வாகம் மற்றும் குறைதீா்க் குழு சாா்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் மாணவா் பிரதிநிதிகளிடம் விளக்கிக் கூறினோம். அது தங்களுக்கு திருப்தியளிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
அதேவேளையில், மருத்துவக் கல்லூரி நிா்வாக அளவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு அவா்கள் வலியுறுத்தினா். ஏற்கெனவே காவல் துறை அத்தகைய முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதால் கல்லூரி அளவில் அது தேவையில்லை என விளக்கமளிக்கப்பட்டது.
வெளியிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு பணியாளா்களை வழங்கும் நிறுவனங்களிடம் பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இஎஸ்ஐ நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என உறுதியாக அவா்களிடம் தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி மற்றும் நோயாளிகள் சேவைகளில் எந்தத் தடையும் ஏற்படாத வகையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, மாணவா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.