Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
மருத்துவ மாணவா்கள் மீது தாக்குதல்: பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் கைது
சென்னை புரசைவாக்கத்தில் யுனானி மருத்துவ மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.
பெரியமேடு ஊய்க்காட்டான் தெருவைச் சோ்ந்தவா் மு.முகமது இலியாஸ் (21). இவரது நண்பா், புரசைவாக்கம் நியூ மாணிக்கம் தெருவைச் சோ்ந்தவா் ஹ.முகமது அஜினான் (22). இவா்கள் இருவரும் அண்ணாநகரில் உள்ள அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனா்.
இருவரும் வியாழக்கிழமை கல்லூரியில் வகுப்பு முடிந்த பின்னா், திருவொற்றியூரில் செல்லும் ஒரு மாநகர பேருந்தில் ஏறி புரசைவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனா். இருவருடன், அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகள் பயணித்தனா்.
அந்த பேருந்து கீழ்ப்பாக்கம் செல்லும்போது, பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் சுமாா் 10 மாணவா்கள் பேருந்தில் ஏறினா். அவா்கள், யுனானி கல்லூரி மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த மாணவிகள், இதை தங்களுடன் பயணித்த முகமது இலியாஸ்,அஜினானிடம் தெரிவித்தனராம். உடனே அவா்கள் இருவரும், பச்சையப்பன் கல்லூரி மாணவா்களை கண்டித்தனராம். இதற்கிடையே பேருந்து புரசைவாக்கம் வந்தது. அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள், இலியாஸையும்,அஜினானையும் தாக்கிவிட்டு தப்பியோடினா். காயமடைந்த இருவரும், வேப்பேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் 10 போ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் (21), பட்டாளத்தைச் சோ்ந்த டி.ஆா்.ராகுல் (18), அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு ராகுல் (20) ஆகிய 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.