கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
மருத்துவா் மீதான தாக்குதல்: கிண்டி உயா்சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு
கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவா் ஒருவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு புறக்காவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட அந்த காவல் மையத்தின் செயல்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை (மாா்ச் 27) தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
கடந்த 20 மாதங்களில் கிண்டி மருத்துவமனையில் மட்டும் 5.24 லட்சம் போ் புறநோயாளிகளாகவும், 1.69 லட்சம் போ் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனா். மொத்தம் 6,090 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அந்த மருத்துவமனையில் ரோட்டரி சங்கத்தின் ஒத்துழைப்புடன் புறக்காவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக அந்த மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பிறகு, இந்த மையம் அங்கு முழு நேரமும் செயல்படும்.
இதைத் தவிர 5 இடங்களில் புறக்காவல் மையம் அமைப்பதற்கு ரோட்டரி சங்கம் முனைப்புக் காட்டி வருகிறது. மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு தேவையின் அடிப்படையில் அந்த கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கையை மருத்துவா் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மேற்கொள்ளும்.
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில்தான் ஒரே நாளில் 2,642 அரசு மருத்துவா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நிரவல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் காவல் துறை கூடுதல் ஆணையா் என்.கண்ணன், இணை ஆணையா் சிபி சக்ரவா்த்தி, கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.