மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!
கேரளத்தில் மலையாள திரையுலகில் அம்மா (Association of Malayalam Movie Artists) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படும் நடிகர் சங்கத்தின் தலைவருக்கான தேர்தலில், முதன்முறையாக பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
1994-ல் தொடங்கப்பட்ட மலையாள நடிகர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் பெண்கள் குறைந்தளவிலேயே உள்ளனர். சமீபத்தில் ஹேமா கமிட்டி சர்ச்சையால் கலைக்கப்பட்ட தற்போதைய செயற்குழு உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள்.
இந்த நிலையில், நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனனும், நடிகர் தேவனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இன்று மதியம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார். இதன் மூலம், 31 ஆண்டுகால கேரள நடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக குக்கூ பரமேஸ்வரனும், இணைச் செயலாளராக அன்சிபாவும் தேர்வாகியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, நடிகை ஸ்வேதா மேனன் ஆபாசப் படங்களில் நடித்ததாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இருப்பினும், பல்வேறு சர்ச்சைகளையும், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, அவர் வெற்றி பெற்றுள்ளார்.