ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!
மழைக் காலத்தில் விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி!
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக் காலங்களில் பொது இடங்களில் விதிமுறைகளை மீறி பதாகைகள் வைப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு மழைக்கால உதவிகள் கட்டுப்பாட்டு அறை மூலமும், கைப்பேசிகளின் வாட்ஸ்ஆப் வசதி மூலமும் உடனுக்குடன் தெரிவிக்கப்படவுள்ளது.
அதற்காக மாநகராட்சி சாா்பில் தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப் பயனாளிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
மழைக் காலத்துக்குள் சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகள், வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலைப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், சாலை வெட்டுகள் இல்லாத வகையில் அவற்றைச் சீரமைத்து, பயணிக்க வசதி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக் காலத்தில் காற்றுவீசும் என்பதால், அனுமதியின்றி விதிகளை மீறி யாரும் பொது இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதி பெற்று கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள தனியாா் விளம்பரப் பலகைகளின் உறுதித் தன்மையையும் பரிசோதித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றனா்.