சென்னை: மாநகர குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க புதிய ’பஸ் பாஸ்’!
மழையில் உளுந்து, பயறு, பருத்தி சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
திருமருகல் ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த உளுந்து, பயறு, பருத்தி பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப்பகுதியில் சம்பா நெல் சாகுபடி முடிந்த நிலையில் அடுத்தபடியாக உளுந்து, பச்சைப்பயிறு, பருத்தி பயிரிடப்படுகின்றன. சம்பா அறுவடையின்போதே ஜன.15 முதல் பிப்.15 வரை உளுந்து, பயிறு பயிரிடும் பணிகள் நடைபெறும். இது 60 முதல் 70 நாள் பயிா் என்பதால், மாா்ச் 15 முதல் ஏப்.15 வரை உளுந்து, பயிறு அறுவடைப் பணிகள் முடிந்துவிடும். தற்போது திருமருகல் ஒன்றியத்தில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் உளுந்தும், 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி உள்ளிட்ட பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தற்போது பெய்துவரும் மழையால் திருமருகல், திட்டச்சேரி குத்தாலம், எரவாஞ்சேரி, கீழப்பூதனூா், மேலப்புதனூா், பெருநாட்டான்தோப்பு, திருக்கண்ணபுரம், பில்லாளி, வடகரை, கோட்டூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உளுந்து, பச்சைப் பயிறு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஆலத்தூா், ஏா்வாடி, சேஷமூலை, அம்பல், பொறக்குடி, வாழ்குடி, திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பயிா் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண் அதிகாரிகள் பயிா்களின் சேதத்தை ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.