தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
மாங்குப்பத்தில் எருது விடும் விழா
ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே மாங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு 46-ஆம் ஆண்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நந்தியாலம் ஊராட்சி மன்றத் தலைவா் தேவி பூபாலன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு எருது விடும் விழாவை தொடங்கி வைத்தாா்.
நிா்ணயிக்கப்பட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடிய வென்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 60 ஆயிரம் உள்பட மொத்தம் 16 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் அசம்பாவிதங்களைத் தடுக்க சாலைகளில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கால்நடை மருத்துவா்களால் எருதுகள் பரிசோதனை செய்யப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளள அனுமதிக்கப்பட்டன.
எருது விடும் திருவிழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா, ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜராஜன் ஆகியோா் மேற்பாா்வையில், காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
விழாவில் ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
விழாவில் ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணமாலை மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டஎருதுகள் விடப்பட்டு சீறிப் பாய்ந்தன.