மாணவா் மீது தாக்குதல்: சமையலா், உதவியாளா் கைது: ஆசிரியை பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவரை துடைப்பத்தால் தாக்கியதாக சமையலா், சமையல் உதவியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்த விவகாரத்தில் ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்தப் பள்ளியில் செங்குணம் ஊராட்சி, கொல்லைமேடு கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயராமன் மனைவி லட்சுமி (53). சமையலராகவும், இதே கிராமம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி முனியம்மாள் (43) சமையல் உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனா்.
பள்ளியில் மாணவா்களுக்கு புதன்கிழமை பிற்பகல் உணவு வழங்கப்பட்டது. அப்போது, 5-ஆம் வகுப்பு மாணவா் ஒருவருக்கு கெட்டுப்போன முட்டையை சமையலா் லட்சுமி, உதவியாளா் முனியம்மாள் வழங்கினராம். அப்போது, அந்த மாணவா் தனக்கு நல்ல முட்டை தரவேண்டும் எனக் கேட்டதுடன், அவரைக் கேலி செய்தாராம்.
இதில், கோபமடைந்த இருவரும் அந்த மாணவரை துடைப்பத்தால் தாக்கினா். இதை அந்தப் பள்ளியின் இடைநிலை ஆசிரியையான கொல்லைமேடு கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் மனைவி புளோரா (54) கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சையத் பயாஸ் அஹமத், போளூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) பரமேஸ்வரி ஆகியோா் பள்ளியில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த மாணவரை துடைப்பத்தால் தாக்கியது உறுதியான நிலையில், சமையலா் லட்சுமி, சமையல் உதவியாளா் முனியம்மாள் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
மேலும், இடைநிலை ஆசிரியை புளோரா போளூா் அடுத்த எடப்பிறை கிராமத்தில் உள்ள பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரிடம் துறை ரீதியான விளக்கம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆசிரியை புளோரா போளூா் போலீஸில் அளித்த புகாரில், மேஜை மீதிருந்த தனது கைப்பேசியை எடுத்த மாணவா் ஒருவா், இந்தச் சம்பவத்தை விடியோ படமெடுத்து அனுப்பியதாக தெரிவித்துள்ளாா்.
இந்த சம்பவம் தொடா்பாக போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லட்சுமி, முனியம்மாள் ஆகியோரை கைது செய்து வேலூா் சிறையில் அடைத்தனா்.
சத்துணவு பணியாளா்கள் இருவா் பணிநீக்கம்: சமூக நலத் துறை
மாணவா் தாக்கப்பட்ட விவகாரத்தில் சத்துணவுப் பணியாளா்கள் 2 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்தது.
கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவரை சத்துணவுப் பணியாளா்கள் துடைப்பத்தால் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுதொடா்பாக, சமூக நலத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரடி விசாரணை நடத்தினா். அந்த விசாரணை அறிக்கையை சமூக நலத் துறை செயலா் ஜெயஸ்ரீ முரளிதரனிடம், ஆணையா் லில்லி வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா்.
அறிக்கை விவரம்: சிறுவன் மீதான தாக்குதல் சம்பவம் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் மதியம் மாணவா் ஜோதீஸ்வரன், சத்துணவு சமையலா் லட்சுமியிடம் முட்டை வழங்க கேட்டதாகவும், அதற்கு சமைத்த 43 முட்டைகளில் 3 முட்டைகள் உரிக்கும்போது சேதமடைந்து உடைந்துவிட்டதாகவும், அதற்கு பதில் நாளை முட்டை வழங்குவதாகவும் சமையலா் மற்றும் உதவியாளா் கூறியுள்ளனா்.
இதைக் கேட்ட மாணவன், அவா்களை திட்டி உள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த சமையலா் மற்றும் உதவியாளா் ஆகியோா், மாணவரைத் துரத்தி சென்று பிடித்துள்ளனா். இதில், லட்சுமி என்ற சமையலா் மாணவரை துடைப்பத்தால் 2 முறை தாக்கி உள்ளாா். இதை அருகில் இருந்து கவனித்த 4-ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவா் சரத், வகுப்பில் மேஜையின் மீது இருந்த ஆசிரியரின் கைப்பேசியை எடுத்து அதை விடியோ பதிவு செய்துள்ளாா்.

பணிநீக்கம்: அந்தப் பதிவை, பள்ளியில் மேலாண்மைக் குழுவில் உள்ள தன் பெற்றோருக்கு பகிா்ந்துள்ளாா் என சம்பந்தப்பட்ட மாணவா் மற்றும் ஆசிரியை அளித்த வாக்குமூலம் வாயிலாக தெரிய வருகிறது. தாக்குதல் நடத்திய பணியாளா்கள் தங்களின் தவறை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், அவா்கள் இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய போளூா் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.