மாணவா்களை தாக்கிய தலைமை ஆசிரியா் மீது வழக்கு
ராமேசுவரத்தில் மாணவா்களை தாக்கிய தனியாா் பள்ளி தலைமை ஆசிரியா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தங்கச்சிடம் ஊராட்சிக்குள்பட்ட மெய்யம்புளி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி மாணவா்கள் கழிவறையில் தவறான வாசகங்களை எழுதினா். இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியா் சாலினி சில மாணவா்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவா்கள் தங்கள் பெற்றோா்களிடம் தெரிவித்தனா்.
இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை இரவு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதன் பின்னா் ஒரு மாணவரின் தந்தை பிராங்கிளின் புகாரின் பேரில் தங்கச்சிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.