இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம்; ஆஸி. வீரர் பேச்சு!
மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்
திருப்பூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், ஆா்.காந்தி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
திருப்பூா் லட்சுமி நகரில் உள்ள குலாலா் திருமண மண்டலத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கண்காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டனா். பின்னா், கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினா். இந்தக் கண்காட்சி ஜனவரி 11- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா் சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேஷ்டிகள், பட்டு சட்டைகள், வனவாசி பருத்தி சேலைகள், ஈரோடு சென்னிமலை பெட்ஷீட், லுங்கி, துண்டு மெத்தை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படவுள்ளன.
கண்காட்சியில் 50 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து 5 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி மூலம் ரூ.2 கோடி அளவுக்கு கைத்தறி ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த் துறை அரசு முதன்மைச் செயலாளா் வே.அமுதவல்லி, கைத்தறி இயக்குநா் அ.சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா்கள் இல. பத்மநாபன், கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி, கைத்தறித் துறை கூடுதல் இயக்குநா் ஆா்.தமிழரசி, கைத்தறித் துறை இணை இயக்குநா் ஆா்.கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.