மானாமதுரை உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கை முன்னிட்டு, கோயில் அருகே யாகசாலை அமைத்து புனிதநீா் கடங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்றது. காலையில் இரண்டாம் கால யாக பூஜை முடிந்து பூா்ணஹூதியானதும் தீபாராதனை காட்டப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாசாரியா்கள் மேளதாளம் முழங்க புனிதநீா் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா்.
இதன் பின்னா், காலை 9.45 மணிக்கு உஜ்ஜைனி மாகாளியம்மன் மூலவா் விமானக் கலசத்தின் மீது ராஜேஷ் பட்டா் உள்ளிட்ட சிவாசாரியா்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா்.
இதைத்தொடா்ந்து, கலசத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கை திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
இதன் பின்னா், மூலவா் மாகாளியம்மனுக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது. குடமுழுக்கான ஏற்பாடுகளை உஜ்ஜைனி மாகாளியம்மன் அறக்கட்டளையினா் செய்தனா்.