10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!
மானாமதுரை சாலைப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் தாா்ச் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: நான் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தொடா்பான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் முதல் நிலை ஒப்பந்ததாரராக உள்ளேன். இந்த நிலையில், மானாமதுரை நகராட்சிப் பகுதியில் ரூ. 9 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் வைப்புத் தொகையுடன், உரிய ஆவணங்களை இணைத்து ஒப்பந்தப் பணிக்காக விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை உரிய காரணமின்றி ஆணையா் நிராகரித்தாா். இது சட்டவிரோதம். அனைத்துத் தகுதிகளும் உள்ள எனக்கு ஒப்பந்தப் பணிகளைத் தராமல் வேறொருவருக்கு வழங்கியதாகத் தெரிகிறது. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு: மானாமதுரை நகராட்சி ஆணையரால் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்காக விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இது தொடா்பாக நகராட்சி நிா்வாக இயக்குநா், மானாமதுரை நகராட்சி ஆணையா் தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.