மானாமதுரையில் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை: தொடா் போராட்டத்துக்கு தயாராகும் பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சியில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் பல இடங்களிலிருந்து கொண்டுவரப்படும் பொது உயிரி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு ஆலை தொடங்க கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், இந்த ஆலையை அமைக்க கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து ஆலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் இந்த ஆலையை தொடங்குவதற்கான கட்டுமானப் பணி ரகசியமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மானாமதுரை, சூரக்குளம் பில்லறுத்தான், செய்களத்தூா் ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: ஏற்கெனவே மருத்துவக் கழிவு ஆலையை தொடங்குவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்தோம். இந்த நிலையில் ரகசியமாக ஆலையைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலை தொடங்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பல நோய்கள் எங்களைத் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆலைக்கான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் தொடா் போராட்டங்களை நடத்துவோம் என்றனா்.