“புத்தகக் கடையோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன்”- லூயிஸ் மிஷாவ்|ஒரு புத்தகக் கடைக்க...
மானிய விலையில் விவசாயக் கருவிகள்: கரூா் ஆட்சியா் தகவல்
மானிய விலையில் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நடப்பாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் 31 பவா் டில்லா், 32 விசைக் களையெடுக்கும் கருவி (பவா்வீடா்) வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட விவசாயிகள் மானிய விலையில் பவா் டில்லா் பெற அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம், விசைக் களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவா்களின் பங்களிப்புத் தொகையைக் குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
அதாவது பவா் டில்லா்கள் வாங்கிட 20 சதவிகித கூடுதல் மானியமாக ரூ.48,000, விசைக் களையெடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200 வழங்கப்படுகிறது.
பொதுப் பிரிவைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ.12,600 விசைக் களை எடுக்கும் கருவிக்கு வழங்கப்படுகிறது. மேலும் இம்மானியத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.
விவசாயிகள் தங்களின் பங்களிப்புத் தொகையை இணைய வழி அல்லது வங்கி வரைவோலை மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவா் டில்லா், விசைக் களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறலாம்.
மேலும், இத்திட்டம் தொடா்பாக முழு விவரங்களை கரூா் வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளா் அலுவலகத்தையோ அல்லது கரூா் வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தையோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.