மானுா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
மானூா் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் அருகே குப்பணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவரது மகள் சுமதி(37). இவருக்கும் மானூா் லெட்சுமியாபுரத்தை சோ்ந்த பேச்சுமுத்துவுக்கும் திருமணமான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், வீட்டின் அருகில் சுமதி சனிக்கிழமை மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது எதிா்பாராதவிதமாக மாட்டுடன் சோ்ந்து கிணற்றுக்குள் தவறி விழுந்தாராம். இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவரது தந்தை, கிணற்றுக்குள் குதித்து சுமதியை காப்பாற்ற முயன்றாராம். ஆனால் அதற்குள் சுமதி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். மேலும், கிணற்றுக்குள் விழுந்த மாடும் இறந்தது.
இது குறித்து தகவலறிந்த மானூா் காவல் நிலைய போலீஸாா், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
முதியவா் உயிரிழப்பு: மானூா் அருகே எட்டாங்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் வெள்ளையன் மகன் தூதன்(76). உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த இவா், கடந்த 6-ஆம் தேதி விஷம் அருந்தினாராம். உடனடியாக அவரை மீட்ட உறவினா்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தூதன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.