`யார் இந்த தியாகி... திமுக-வின் புதிய பவர் சென்டர் ரத்தீஷா?"- கேள்விகள் எழுப்பும...
மாமன் விமர்சனம்: உறவுச் சிக்கலைப் பேசும் மெலோடிராமா; ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட அந்த எமோஷன்கள்?!
திருச்சி மாவட்டத்தில் இனிப்பு பலகார நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூரி. தந்தையை இழந்த அவருக்கு, தன் அக்கா சுவாசிகாதான் உயிர்.
சுவாசிகாவிற்குத் திருமணம் ஆகி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குழந்தை இல்லாததால் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவரது மனதைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில், கருவுறும் சுவாசிகா ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதீத பாசத்தைத் தன் அக்கா மகன் பிரகீத் சிவன் மீது பொழிந்து வளர்க்கிறார் தாய்மாமன் சூரி.
இதனிடையே சூரி தன் காதலி ஐஸ்வர்யா லெட்சுமியை மணமுடிக்கிறார். திருமணத்திற்குப் பின் சிறுவன் பிரகீத் சிவனால், சூரி - ஐஸ்வர்யா லெட்சுமி இடையே பிரச்னை வருகிறது.
அப்பிரச்னை விரிவடைந்து குடும்பச் சண்டையாக மாறுகிறது. அதற்குப் பிறகு உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கும் 'மாமன்' படத்தின் கதை.

குடும்பத்தார் மீது அக்கறை, அக்கா மகன் மீது அதீத பாசம், மனைவி மீதான காதல் எனக் குடும்பங்களின் கதாநாயகனாக எமோஷனல் மீட்டரில் ஜொலிக்கிறார் சூரி.
ஆக்ஷன் மற்றும் ஆக்ரோஷம் மீட்டர்களில் தேவையான மைலேஜையும் கொடுத்திருக்கிறார்.
எமோஷனலான காட்சிகளில் நடிப்பில் தேர்ச்சியை உணர முடிந்தாலும், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் ஓவர் டோஸைத் தவிர்த்திருக்கலாம்.
காதல், கோபம், ஆற்றாமை என அழுத்தமான கதாபாத்திரத்தின் பொறுப்பை உணர்ந்து, நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஐஸ்வரியா லெட்சுமி.
உணர்வுகளோடும் உணர்ச்சிகளோடும் மல்லுக்கட்டும் கதாபாத்திரத்தில் சுவாசிகா தன் தேர்வை நியாயப்படுத்துகிறார்.
சிறுவன் பிரகீத் சிவனிடமிருந்து அக்கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்.
பாபா பாஸ்கர், ராஜ் கிரண், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம் ஆகியோர் பாசப் பந்திக்குத் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
அதேநேரம், ஒட்டுமொத்தமாக எல்லா கதாபாத்திரங்களும் ஆங்காங்கே ஓவர் டோஸ் எமோஷன் மோடுக்குச் சென்றுவிடுவது நாடகத்தன்மையை அதிகரித்திருக்கிறது.

கிராமத்து வீட்டு நிகழ்ச்சிகள், கிராமத்து வீடுகள், தனித்தனியான அறைகள் என எல்லா காட்சிகளிலும் மிகைத்தன்மையோ, அதீதமோ இல்லாத எதார்த்தமான ஒளியமைப்பைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்.
நெட்டி முறிக்கும் சில எமோஷனல் காட்சிகளின் நீளத்தைக் குறைக்கத் தவறுகிறார் படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா.
ஹெஷாம் அப்துல் வஹாப் இசையில் டஜன் கணக்கான பாடல்கள் சீர் வரிசையாக அணிவகுத்து படம் முழுவதும் வந்தாலும், மனதில் எந்தப் பாடலும் தங்கவில்லை.
சீர் வரிசைக்குத் துணை வரிசையாக இடைவேளை இல்லாமல் ஒளித்துக்கொண்டேயிருக்கும் பின்னணி இசையில் ஆங்காங்கே இந்நிலத்துக்குப் பொருந்தாத அந்நியத்தன்மை!
சூரியின் குணம், அக்கா மீதான பாசம், சின்ன சின்ன காதல் முட்டல்கள், அக்கா மகனின் வருகை என ஒரு சில காட்சிகளிலேயே கதைக்குள் ஓடி, கலகலப்போடும் எனெர்ஜியோடும் ஆரம்பிக்கிறது திரைக்கதை.
மாமன் - மாப்பிள்ளைக்கு இடையிலான கலாட்டாக்கள், சேட்டைகள், பாச விளையாட்டுகள் போன்றவைத் தொடக்கத்தில் சிரிப்பலையைப் படரவிட்டாலும், கதையைப் போட்டது போட்ட படி போட்டுவிட்டு, 'மாமா - அக்கா மகன் அலப்பறைகளாக' மட்டுமே திரைக்கதை நீண்டுகொண்டே போவது அயற்சி!
ஒருவழியாக இடைவேளைக்கு முன்பு கதையைக் கண்டுபிடித்து, நிமிர்ந்து உட்காருகிறது திரைக்கதை.

குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிறுசிறு முரண்பாடுகள், உறவுச் சிக்கல்கள், தனிமனித சுதந்திரம் எனப் பல எமோஷனல் புள்ளிகளைக் கையிலெடுக்கிறது இரண்டாம் பாதி.
ஆனால், அந்த எமோஷன் புள்ளிகளைத் திகட்டத் திகட்ட ஹைபிச் மீட்டரில் இணைக்க முற்பட்டிகிறது படம்.
கதை பேச வரும் பிரச்னை என்ன என்பதை முதற்பாதியில் தெளிவாகக் காட்டிவிட்டு, அதற்கான உரையாடல்கள், தீர்வுகள் குறித்து காட்சிகள் நகராமல், அதிலிருந்து விலகி செயற்கையான காட்சிகளால் செயற்கையான எமோஷனைத் திணிக்க முயல்கிறது திரைக்கதை.
அதுவரை எதார்த்தமாக உலாவிய எல்லா கதாபாத்திரங்களும் தேவையில்லாமல் யூடேர்ன், வீலிங், சம்மர் சால்ட் எல்லாம் அடித்து விளையாடுவதால், இரண்டாம் பாதி எமோஷனல் காட்சிகள் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கவில்லை.
ஐஸ்வர்யா லெட்சுமி கதாபாத்திரம் தெளிவோடும், நிதானத்தோடும் எழுதப்பட்டிருந்தாலும், அக்கதாபாத்திரமும் ஒருகட்டத்தில் குழப்பக் குளத்தில் குதித்து விடுகிறது.
இப்படி கதையிலிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கும் எமோஷன் காட்சிகளால் இறுதிக்காட்சி தேவையான கனத்தைப் பெறாமல் போகிறது.
மேலும், காட்சிகளால் உரையாட வேண்டிய கதையின் கருவை, வெறும் வசனங்களால் மட்டும் பேசி முடித்திருப்பது ஏமாற்றமே!

பல காலங்களாக நிலவும் இவ்வகையான உறவுச் சிக்கல்களைச் சமகால தலைமுறையின் பாலின சமத்துவ முதிர்ச்சியோடு அணுகி, அதற்கான தீர்வை முன்வைக்காததும் மைனஸ்!
குடும்பத்திற்குள் வரும் உறவுச் சிக்கல் எனும் தாம்பாளத்தைக் கையிலெடுத்திருக்கிறான் இந்த 'மாமன்'. ஆனால் அதை ஓவர் டோஸ் எமோஷனல் காட்சிகளால் மட்டுமே நிரப்பியிருப்பதால், தாம்பாளம் தடதடத்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...