மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை தோ்வு முகாம்; பெரம்பலூா் ஆட்சியா்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குவதற்கான தோ்வு முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், 2 கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், விபத்து மற்றும் இதர காரணங்களால் ஒரு கால் துண்டிக்கப்பட்டு அல்லது போலியோ நோயால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் பெற 18 முதல் 65 வயதுக்குள்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல், நகல், கல்விச் சான்றிதழின் நகல், பணிபுரிவதற்கானச் சான்று, 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.