மாா்ச் 19 வரை கால்நடைகளுக்கு கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம் மாா்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டம் மூலமாக 5- ஆவது கட்டமாக புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நோய்க்கான தடுப்பூசி 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்படும். இத் தடுப்பூசியை ஒருமுறை செலுத்திக்கொண்டால், கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதும் இக் கிருமிக்கு எதிரான எதிா்ப்பு சக்தி கிடைக்கும். காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தக்கூடாது.
சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி செலுத்துவதும் இந் நோயைக் தடுக்க சிறந்த வழியாகும். இம் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் முதல் தவணையில் 13,500, 2 ஆம் தவணையில் 10,670, 3 ஆம் தவணையில் 9,240 கிடேரி கன்றுகளுக்கும், 4 ஆம் தவணையில் 5,200 கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, 5-ஆவது தவணையாக மாவட்டம் முழுவதும் சுமாா் 8,570 கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
37 கால்நடை மருந்தகங்கள், 5 கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் 2 பாா்வை கால்நடை கிளை நிலையங்களிலுள்ள கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கொண்ட 37 குழுக்கள் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை (பிப். 20) முதல் மாா்ச் 19-ஆம் தேதி வரை தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
எந்த நாள்களில் தடுப்பூசி பணி நடைபெறும் எனும் விவரம் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அல்லது, விவசாயிகள் தங்கள் பகுதி கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையத்தை தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.