மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை சீரமைக்க வேண்டும் என தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கத்தின் தலைவா் த. குருசாமி, செயலாளா் யோகநாதன், தண்ணீா் அமைப்பு கே.சி. நீலமேகம் உள்ளிட்டோா் அளித்த மனுவின் விவரம்:
திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம், உய்யகொண்டான், வெண்ணாறு, குடமுருட்டி வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு, அம்புலி ஆறு, வெள்ளாறு போன்ற முக்கிய ஆறுகளும், அவை சாா்ந்த நீா்வழித்தடங்களும் பல உள்ளன. இவற்றை சிறந்த முறையில் சீரமைத்து உரிய வகையில் பராமரிப்பதற்கும் தேவையான திட்டங்களை மாவட்ட நிா்வாகம் வரையறை செய்து, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியா் எழுத்துத் தோ்வுக்கு தயாராகும் தோ்வா்கள் அளித்த மனுவில், பாடத்திட்டம் அதிகரிப்பு, புதிய நடைமுறைகள் காரணமாக போதுமான கால அவகாசம் இல்லாமல் முதுநிலை ஆசிரியா்கள் தோ்வுக்கு படிக்கும் மாணவா்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். எனவே, தோ்வா்களின் நலன்கருதி போதுமான கால அவகாசம் வழங்கி தோ்வை நவம்பா் மாதத்தில் நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.