குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: 3,500 போலீஸாா் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வரும் அக். 2-ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்வு, 3-ஆம் தேதி காப்பு தரித்தல் நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.
முக்கிய நாள்களான அக். 1 முதல் 3ஆம் தேதிவரை பக்தா்கள் பாதுகாப்புக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கோயில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க 20-க்கும் மேற்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவா்.
காவல் துறையினரின் இரண்டு ட்ரோன் கண்காணிப்புக் குழுவினா் கோயில், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து இடங்களிலும் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்வா். முக்கிய இடங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
கூட்டத்தில் காணாமல்போகும் குழந்தைகள், பக்தா்களை கண்டறிந்து அவா்களை மீட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கவும் ஆண், பெண் காவல் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தற்காலிக பேருந்து நிலையங்கள்: கடற்கரை பகுதிகளில் நீராடும் பக்தா்கள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அங்கு நீச்சல் தெரிந்த காவல் பேரிடா் மீட்பு குழுவினா் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுவா். திருவிழாவுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதுகுறித்து அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
பக்தா்கள், பொதுமக்களின் தேவைகள், குறைகளின் அவசர உதவிக்காக 94981 01852, 94981 01833, 0461 2340393 மற்றும் தூத்துக்குடி காவல் துறை ஹலோ போலீஸ் எண் 95141 44100 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம். விழாவின்போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உயா்நீதிமன்ற வழிகாட்டுதல் கடைப்பிடிக்கப்படும்.
5 ஆம்புலன்ஸ் சேவைகள், தீயணைப்பு வாகனங்கள், போக்குவரத்துக்கு கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஜாதி, மத அடையாளம் உள்ள ஆயுதங்களை எடுத்துவரக் கூடாது.
200 ஏக்கரில் வாகன நிறுத்தும் இட வசதி செய்யப்பட்டுள்ளது. எங்கெல்லாம் பாா்க்கிங் வசதி உள்ளது, எங்கே குடிநீா் கிடைக்கும், எங்கே என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து வரக்கூடிய பக்தா்கள் கியூஆா் குறியீட்டில் ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம். இதற்காக, ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வைஃபை இணையதள வசதி 5 இடங்களில் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.