மாா்த்தாண்டம் அருகே மகனை தாக்கிய தந்தை மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே தகராறில் ஈடுபட்ட மகனை மண்வெட்டியால் தாக்கிய தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை, படவடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மணிமுத்து. இவா் மகன் ராஜேஷ் (39). ராஜேஷ் பல வருடங்களாக மதுவுக்கு அடிமையான நிலையில், தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் ராஜேஷ் மீண்டும் தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மணிமுத்து மண்வெட்டியால் ராஜேஷின் கழுத்திலும், தலையிலும் தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து, ராஜேஷின் மனைவி விஜிலா (37) அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் மணிமுத்து மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.