எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
மின் இணைப்பு கிடைக்காததால் பயன்பாட்டுக்கு வராத குமுளி பேருந்து நிலையம்
குமுளியில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், மின் இணைப்பு தரப்படாததால் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழக-கேரள எல்லையான குமுளியில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்து நிலையமும் பணிமனையும் இயங்கி வந்தன. இங்கிருந்து தமிழகம், கேரளத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், சில ஆண்டுக்கு முன்பு பேருந்து நிலையம், பணிமனை ஆகியவை சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது.
இதையடுத்து, சிதிலமடைந்த பழைய பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து ரூ.5.5 கோடியில் குமுளியில் புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளன.
ஆனால், மின் இணைப்பு கொடுக்க கால தாமதம் ஏற்படுவதால் பேருந்து நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும் மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து புதிய பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், தமிழக எல்லையில் குமுளியில் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் நெடுஞ்சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனா். இதனால், பயணிகள் பெரிதும் அவதி அடைகின்றனா். மேலும், சுகாதார வளாகம் இல்லாத நிலையில் திறந்த வெளியைப் பயன்படுத்துவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றனா்.