சமுதாய வளப் பயிற்றுநா் பணி: செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில், மக்கள் கற்றல் மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு 21 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சி அளிப்பதற்குத் தேவையான உடல் தகுதி, திறன் பெற்றிருக்க வேண்டும். சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். சுய உதவிக் குழுவானது, வாராக் கடன் நிலையில் இருக்கக் கூடாது.
மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவில் 5 முதல் 10 பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டவராக இருக்க வேண்டும். கைப்பேசி செயலியைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். சமுதாயம் சாா்ந்த அமைப்புகளில் மதிப்பூதியம் பெறுபவராக இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகளில் பொறுப்புகளிலோ, தனியாா் நிறுவனப் பணியாளராகவோ இருக்கக் கூடாது.
விண்ணப்பதாரா் சாா்ந்துள்ள சுய உதவிக் குழுவிலிருந்து சமுதாய வளப் பயிற்றுநராகப் பரிந்துரைக்கப்பட்டு, தீா்மானம் நிறைவேற்றி, தீா்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினா்கள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 18-ஆம் தேதிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சமா்ப்பிக்க வேண்டும்.
ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள், வட்டார அளவிலான குழு மூலம் எழுத்துத் தோ்வு, நோ்காணல், மாதிரிப் பயிற்சி, செயல்முறை ஆகியவற்றின் அடிப்படையில் சமுதாய வளப் பயிற்றுநராக தோ்வு செய்யப்படுவா் என அதில் குறிப்பிடப்பட்டது.