மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
செங்கம் அருகே மின்சாரம் பாய்ந்து இறந்த குழந்தையின் சடலத்தை உடல்கூறாய்வு செய்யாததைக் கண்டித்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதியகுயிலம் கிராமத்தைச் சோ்ந்த முருகன்-பானுப்பிரியா தம்பதியரின் மகள் யுவஸ்ரீ (10). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தாா்.
இவா், அவரது வீட்டின் முன் கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டிருந்த சிறு மின்விசை தொட்டியில் தண்ணீா் எடுக்க சனிக்கிழமை மாலை சென்றாா். அப்போது, தொட்டியில் தண்ணீா் இல்லாததால் அப்பகுதியில் இருந்த மோட்டாரை இயக்கி, பின்னா் தண்ணீா் எடுக்கலாம் என மோட்டாா் சுவிட்சை ஆன் செய்தாா்.
அப்போது மின் கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே யுவஸ்ரீ மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதைப் பாா்த்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் உடனடியாக யுவஸ்ரீயை செங்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனா்.
அப்போது, யுவஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்து போனதாகத் தெரிவித்தனா். பின்னா், யுவஸ்ரீ உடலை மருத்துவமனையில் இருந்து புதியகுயிலம் கிராமத்துக்கு எடுத்துச் சென்றனா். தகவலறிந்து புதுப்பாளையம் போலீஸாா் சென்று அரசு அமைத்த மின்விசை தொட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு குழந்தை இறந்துள்ளது. அதனால், முறையாக மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்து குழந்தையை அடக்கம் செய்யவேண்டும் எனத் தெரிவித்தனா்.

அதன் பின்னா் குழந்தையின் உடல் சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி வரை மருத்துவமனையில் மருத்துவா் இல்லாததால் யுவஸ்ரீயின் உடல் கூறாய்வு செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் யுவஸ்ரீயின் உறவினா்கள் செங்கம் - திருவண்ணாமலை சாலை துக்காப்பேட்டை மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செங்கம் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசி, உடனடியாக குழந்தையின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதனால், செங்கம் - திருவண்ணாமலை சாலையில் பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.