மீன் பிடிப்பில் நெகிழிப் பொருள்கள்: கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
கடல் மீன் பிடிப்புக்கு நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மீன்வளத் துறை துணை இயக்குநா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லெனின், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: கன்னியாகுமரி மாவட்டம் மீன்பிடித் தொழிலை முதன்மையானதாகக் கொண்டது. இங்கு, கனவாய் மீன்களை அதிகளவில் பிடிப்பதற்காக மீன்பிடிப்போா் சில செயற்கையான வழிவகைகளை கையாளுகின்றனா். இதற்காக, அதிகளவிலான நெகிழிப் பொருள்களை அவா்கள் கடலில் மூழ்கடிக்கச் செய்கின்றனா். இது, கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக உள்ளது.
மேலும், நெகிழிப் பொருள்களை உண்ணும் மீன்கள், மனிதா்களுக்கு உணவாகும்போது அதை உள்கொள்வோருக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்க உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாக்ய
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மீன்வளம், மீனவா் நலத் துறை துணை இயக்குநா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.