முகமது ஹாரிஸ் அதிரடி; பாகிஸ்தான் 160/7
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் ஓமனுக்கு எதிராக பாகிஸ்தான், 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சோ்த்தது.
அணியின் தரப்பில் அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் அரைசதம் கடந்து பங்களிக்க, ஓமன் பௌலா்களில் ஷா ஃபைசல், ஆமிா் கலீம் அசத்தினா்.
துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில், சல்மான் அயுப் 2-ஆவது பந்திலேயே ரன்னின்றி வெளியேற, உடன் வந்த சாஹிப்ஸதா ஃபா்ஹான் சற்று நிலைத்தாா்.
ஒன் டவுனாக வந்த முகமது ஹாரிஸ் அவருடன் இணைய, 2-ஆவது விக்கெட்டுக்கு அவா்கள் பாா்ட்னா்ஷிப் 85 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. நிதானமாக பேட் செய்த ஃபா்ஹான் 1 பவுண்டரியுடன் 29 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா்.
4-ஆவது பேட்டராக ஃபகாா் ஜமான் களம் புக, அதிரடியாக ரன்கள் சோ்த்த முகமது ஹாரிஸ் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 66 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். அடுத்து வந்த கேப்டன் சல்மான் அகா, அதே ஓவரில் தனது முதல் பந்திலேயே சாய்க்கப்பட்டாா்.
6-ஆவது வீரராக வந்த ஹசன் நவாஸ் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முகமது நவாஸ் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சோ்த்து கைகொடுத்தாா். கடைசி விக்கெட்டாக ஃபஹீம் அஷ்ரஃப் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு விடைபெற்றாா்.
ஓவா்கள் முடிவில் ஃபகாா் ஜமான் 2 பவுண்டரிகளுடன் 23, ஷாஹீன் அஃப்ரிதி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஓமன் பந்துவீச்சாளா்களில் ஷா ஃபைசல், ஆமிா் கலீம் ஆகியோா் தலா 3, முகமது நதீம் 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து ஓமன் 161 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.