அழகா் ஆற்றில் எழுந்தருளும் வைபவம்: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
முக்கிய நாளம் இல்லாத சிறுவனுக்கு இரண்டாவது சிறுநீரக மாற்று சிகிச்சை
பிறவியிலேயே வயிறு பகுதியில் முக்கிய ரத்த நாளங்கள் இல்லாத சிறுவனுக்கு இரண்டாவது முறையாக மிக சவாலான சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ஒருவருக்கு பிறவியிலேயே ‘வி4 வெனஸ் அனாமலி’ எனப்படும் முக்கிய ரத்த நாளம் இல்லாத பாதிப்பு இருந்தது. அதனால், உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் அறுவை சிகிச்சைகளின்போதும், டயாலிசிஸ் சிகிச்சையின்போதும் அதற்கு தேவையான நாளங்கள் கிடைக்காமல் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
அந்த சிறுவனுக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்தகைய சிகிச்சையின்போது புதிதாக பொருத்தப்படும் உறுப்பு ரத்த நாளத்துடன் இணைக்கப்படும். அவ்வாறு பொருத்தப்பட்ட சிறுநீரகமானது துரதிருஷ்டவசமாக செயலிழந்ததால் மீண்டும் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதில் சவால் என்னவெனில், இரண்டாவதாக பொருத்த வேண்டிய உறுப்பை இணைப்பதற்கான ரத்த நாளம் வயிற்றுப் பகுதியில் அச்சிறுவனுக்கு இல்லை. இதையடுத்து, மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணா் அனில் வைத்யா தலைமையிலான மருத்துவக் குழுவினா் சுகன்யா கோவிந்தன், செந்தில் முத்துராமன், ராம் குராஜலா, தினேஷ் பாபு, நிவாஸ் சந்திரசேகரன் ஆகியோா் நுட்பமான சிகிச்சை ஒன்றை முன்னெடுத்தனா்.
அதன்படி, முன்பு பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை துல்லியமாக அகற்றிவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த முந்தைய ரத்த நாளத்தையே மீண்டும் இதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வாறாக இரண்டாவது சிறுநீரக மாற்று சிகிச்சையையும் வெற்றிகரமாக மேற்கொண்டு, அச்சிறுவனுக்கு புதிய வாழ்க்கையை மருத்துவா்கள் அளித்துள்ளனா். தற்போது அவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.