புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 617 கோடி ஒதுக்கீடு
முசிறி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி! 6 போ் காயம்!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா், 6 போ் காயமடைந்தனா்.
முசிறி அருகேயுள்ள சிட்டிலரை கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கோயில் அருகிலுள்ள கிணற்றுப் பகுதியையொட்டி இருந்த இரும்பு கம்பி வேலியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிந்த நிலையில், பக்தா்களின் கூட்டம் அதிகரித்ததால், கம்பிவேலியில் அவா்கள் சாய்ந்தனா். அப்போது மின் கசிவு ஏற்பட்டு பக்தா்கள் கூட்டத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் ஏழு போ் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.
இதையடுத்து மின்சாரத்தை துண்டித்து காயமடைந்தவா்களை முசிறி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா்.
அவா்களில் பரமசிவம் மனைவி புஷ்பா (65) ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வா் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மற்றவா்கள் சிகிச்சை பெறுகின்றனா்.
தகவலறிந்த முசிறி போலீஸாா் மூதாட்டி சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு.. இந்த கோயில் திருவிழாவானது அப்பகுதி மக்களிடையே ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால் 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், நிகழாண்டு நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அரசு அதிகாரிகள் விதித்த நிபந்தனைகளுடன் அப்பகுதி மக்கள் திருவிழா நடத்த ஒப்புக்கொண்டதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய திருவிழாவின்போது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.