பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்சம்
ஸ்ரீரங்கம்: சித்ரா பெளா்ணமியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில்திங்கள்கிழமை மாலை கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இருந்து காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, அம்மா மண்டபம் காவிரி ஆறு படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்துக்கு 9.30 மணிக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து, முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மண்டபத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காவிரி ஆற்றுக்குச் சென்றாா். அங்கு நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மாலை 6.15 மணிக்கு நடத்தி காண்பிக்கப்பட்டது.
இதில் கோயில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டியது. பின்னா், இரவு 8.15 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.
விழாவையொட்டி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம் குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.