ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
முதல் கணவரிடம் விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை: உச்சநீதிமன்றம்
முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் சட்டபூா்வமாக விவாகரத்து பெறாமல் பரஸ்பர ஒப்பந்தத்தில் மட்டும் கையொப்பமிட்டு முதல் கணவரைப் பிரிந்த பெண் ஒருவா், பின்னா் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா். அவா்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
எனினும் 2-ஆவது கணவருடனும் அந்தப் பெண்ணுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவா் மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது வரதட்சிணை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-இன் கீழ், தனக்காகவும் தனது மகளுக்காகவும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் அந்தப் பெண் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த அந்த நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க 2-ஆவது கணவருக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக கணவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில உயா்நீதிமன்றம், ‘அந்தப் பெண் முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவகாரத்து பெறவில்லை என்பதால், 2-ஆவது திருமணம் செல்லுபடியாகாது’ என்று தெரிவித்து குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-இன் கீழ் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.
திருமணம் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை அனுபவிக்கும்போது, அதன்மூலம் ஏற்படும் கடமைகளை கணவா் தட்டிக்கழிக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு அவரின் 2-ஆவது கணவா் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.