முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 22-இல் திருப்பூா் வருகை
முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பூருக்கு ஜூலை 22-ஆம் தேதி வருகிறாா்.
திருப்பூா் மாவட்டத்துக்கு 2 நாள்கள் பயணமாக வரும் முதல்வா், மாநகராட்சி சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில்வழி பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறாா். தொடா்ந்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் ஆய்வு மையத்தை பாா்வையிடுகிறாா். பின்னா், திமுக சாா்பில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாட உள்ளாா்.
இதையடுத்து, உடுமலை நேதாஜி மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் 10,000 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்குகிறாா். பின்னா், மாநகராட்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைப்பதுடன், புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளாா்.
இந்நிலையில், முதல்வரின் திருப்பூா் வருகை தொடா்பான துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதல்வா் பங்கேற்கும் 2 நாள்கள் நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் கே.காா்த்திகேயன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மகாராஜ் ஆகியோருடன் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.