முன்பணத் தொகை பிடித்தம்: ரூ.50 ஆயிரம் இழப்பிடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு
காா் வாங்குவதற்காக கொடுத்த முன்பணத்தைப் பிடித்தம் செய்த காா் நிறுவனம் நுகா்வோருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்த சின்சி, நீலாம்பூா் பகுதியில் உள்ள ஒரு காா் விற்பனையகத்தில் பி.எம்.டபிள்யூ காா் வாங்குவதற்காக முன்பணமாக ரூ.1.50 லட்சம் செலுத்தி அண்மையில் முன்பதிவு செய்திருந்தாா்.
பின்னா், அவரால் காா் வாங்க முடியவில்லை. இதனால், தான் செலுத்திய முன்பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா். இதற்கு அந்த நிறுவனம் ரூ.50 ஆயிரத்தைப் பிடித்தம் செய்துகொண்டு ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பித் தந்துள்ளது.
இதனால், சின்சி கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் தங்கவேல், கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், வாகன விற்பனை நிறுவனம் தனது சேவை குறைபாட்டுக்காக அவருக்குத் தரவேண்டிய ரூ.50 ஆயிரம் முன்பணத் தொகையுடன், ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.