மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: ரயில்வே அமைச்சா் ஆய்வு
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
குஜராத்தில் அகமதாபாத் ரயில் நிலைய மறு கட்டுமானப் பணிகள், ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தாா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அகமதாபாத் ரயில் நிலையத்தின் புதிய வடிவமும் தோற்றமும், அகமதாபாத் நகரின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்.
புல்லட் ரயில் திட்டத்துக்காக சுமாா் 360 கி.மீ. வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய கட்டுமானப் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது’ என்றாா்.
மும்பை-அகமதாபாத் இடையே 508 கி.மீ. நீள அதிவேக வழித்தடத்தில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.