மும்மை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: தஹாவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்கா அனுமதி!
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடுகடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் 6 அமெரிக்கா்கள் உள்பட 166 போ் பலியாகினா்.
இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டவா்களில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியும் ஒருவா். அவருக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கும் உதவியதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபா் தஹாவூா் ராணா (62) மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதையும் படிக்க | சிறையில் எப்படியிருக்கிறார் மிக இளம்வயது மரண தண்டனைக் கைதி கிரீஷ்மா?
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக, அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கரோனா தொற்று பாதிப்பு, நன்னடத்தை உள்ளிட்ட காரணாங்களுக்காக கடந்த 2020-இல் அவா் விடுவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை வைத்தது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளிக்குமாறு கலிஃபோா்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு பரிந்துரைத்தது. அதையேற்று, ராணாவை நாடுகடத்த கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராணா, அந்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை தன்னை நாடு கடத்த தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றத்தில் ராணா மற்றொரு மனுவை தாக்கல் செய்தாா்.
இதற்கு அமெரிக்க அரசு தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை நாடு கடத்த தடை விதித்து நீதிமன்றம் 2023 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
ராணா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஹமாஸ் விடுவித்திருக்கும் 4 பெண் பிணைக் கைதிகளும் ராணுவ வீரர்கள்!!
ராணாவை நாடுகடத்த இந்தியா சார்பில் பல்வேறூ முறை கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், ராணாவின் மேல்முறையீட்டு மனுவை கடந்த ஜன. 21 அன்று நிராகரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 64 வயதான தஹாவூர் ராணாவுக்கு இந்தியாவில் சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.