மும்பை: பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்கலாம்... போலி ஆப் மூலம் கோடிகளை இழந்த ...
சைஃப் அலிகான் வழக்கில் திருப்பம்... குற்றவாளியின் கைரேகை பொருந்தவில்லை!
நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கைரேகை , அவரது வீட்டில் பதிவான ரேகையுடன் பொருந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் கடந்த ஜன. 16 நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்த திருடன் அவரைக் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். வீட்டின் பணியாளர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது வீட்டில் இருந்து தப்பியோடிய திருடனின் முகம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.
காவல்துறையினர் மூன்று நாள் தீவிர தேடுதல்களுக்குப் பிறகு, மும்பையை அடுத்து உள்ள தாணே நகரில் பதுங்கியிருந்த குற்றவாளி ஷரீஃபுல் இஸ்லாமை கைது செய்தனா்.
விசாரணைக்குப் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மும்பை காவல்துறையினர் குற்றவாளியை மேலும் ஏழு நாள்கள் காவலில் எடுக்க கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிக்க | குடியரசு நாள் விழா மேடையில் மயங்கி விழுந்த காவல் ஆணையர்! என்ன நடந்தது?
காவல்துறையின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரது காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கைரேகைப் பணியக அமைப்பு தயாரித்த அறிக்கையில், சைஃப் அலிகானின் இல்லத்திலிருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகை மாதிரிகளில் எதுவும் ஷாரிஃபுலின் கைரேகைகளுடன் பொருந்தவில்லை என்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வழக்கில் மும்பை காவல்துறை அவரை முக்கிய குற்றவாளி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை சார்பில் கூடுதல் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியதாகத் தெரிய வந்துள்ளது.
குற்றவாளியின் முகம் என சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரின் புகைப்படம் செய்திகளில் வெளியிடப்பட்டிருந்தது. அது தனது மகன் இல்லை என்று ஷரீஃபுல்லின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஆனால், குற்றவாளி தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கொண்டு வங்கதேசத்திலிருந்து டாக்கி நதி வழியாக 7 மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.