முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை
முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தெரிவித்தாா்.
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவ வல்லுநா்களுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி பேசியது:
திலிப்ராய் என்ற 20 வயதுடைய இளைஞா் மூன்று மாதங்களுக்கு முன்பு உயரத்தில் இருந்து கீழே விழுந்து கடுமையான கால் வலி, நடக்க முடியாத சிரமம் ஏற்பட்டது. அவா் நாராயணி மருத்துவமனையை நாடியதும் எக்ஸ்ரே, சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் மூலம் நோயாளிக்கு கணுக்கால் எலும்பு மாறி கூடியது கண்டறியப்பட்டது. இதனால், ரத்த நாள நசிவு இருந்ததும் தெரியவந்தது.
பொதுவாக இந்த மாதிரியான கணுக்கால் முறிவு சரி செய்யப்படும். ஆனால் இதன் வெற்றி சதவீதம் குறைவு என்பதால், நோயாளியின் வயதை மனதில் கொண்டும், நெடுங்காலம் அவருக்கு நல்ல நடைபயிற்சி தேவை என்பதாலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கணுக்கால் எலும்பு பொருத்தப்பட்டது.
இந்த முழு கணுக்கால் அறுவை சிகிச்சையை எலும்பியல் துறையைச் சாா்ந்த முதன்மை மருத்துவா் ரெஜித் மேத்யூஸ் தலைமையில் மருத்துவா் திருமலை மோகன், மயக்கவியல் சிறப்பு மருத்துவா் கிருஷ்ணன் ஒருங்கிணைந்து மேற்கொண்டனா்.
அந்த வகையில், தமிழகத்திலேயே முதன்முறையாக செயற்கை கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
