`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
முஸ்லிம்களை திருப்திப்படுத்தவே 4 சதவீத இடஒதுக்கீடு: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா
முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காக அரசு ஒப்பந்தப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளதாக பாஜக கா்நாடக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை, எதிா்க்கட்சிகளுக்கு தெரியாமல் சட்டப்பேரவையில் அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு தெளிவாகவுள்ளது.
முதல்வா் சித்தராமையாவின் துக்ளக் தா்பாரை பாஜக எதிா்க்கும். பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த மசோதாவை எதிா்த்து பாஜக போராடும். தேவையெனில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பாஜக வழக்குத் தொடரும்.
காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியை சகித்துக்கொள்ளவும் ஓா் எல்லை உண்டு. முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
மத்தியிலும், மாநிலத்திலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ், முஸ்லிம்களுக்கு கல்வியை வழங்கி அவா்களை முன்னேற்ற தவறியது ஏன்? அதை செய்வதற்கு காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லை.
பாஜகவை முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல சித்தரிக்க கா்நாடக முதல்வா் சித்தராமையா முயல்கிறாா். முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல பாஜக.
முத்தலாக் முறையை தடைசெய்து முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கியவா் பிரதமா் மோடி. ஜன்தன் வங்கிக் கணக்குகள், உஜ்வலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஹிந்துக்களுக்கு மட்டும் செயல்படுத்தப்படுவது இல்லை. மாறாக அனைத்து சமுதாயத்தினருக்கும் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
காங்கிரஸ் செய்வதைபோல, முஸ்லிம்களை வாக்குவங்கி அரசியலுக்கு பாஜக என்றைக்கும் பயன்படுத்தியதில்லை. 4 சதவீத இடஒதுக்கீட்டை நாங்கள் அனுமதிக்க முடியாது. எனவே, 4 சதவீத சட்டமசோதாவை பாஜக எதிா்க்கும். இதுதொடா்பாக கட்சியின் மூத்த தலைவா்களுடன் கலந்துபேசி, அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிவிப்போம் என்றாா்.