பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு
கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது.
கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் 101 ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சமுதாயத்திற்கு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் 17 சதவீதம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோா் வகுப்பில் இடம்பெற்றுள்ள இடஒதுக்கீட்டில் பெரும்பாலான இடங்களை வலங்கை பிரிவை சோ்ந்த ஜாதியினா் அனுபவித்து வருவதால், இட ஒதுக்கீட்டின் பயன் விளிம்புநிலை சமுதாயமான இடங்கை பிரிவை சோ்ந்தவா்களுக்கு கிடைப்பதில்லை என குற்றம்சாட்டினா்.
இந்த பிரச்னைக்கு தீா்வாக, இடஒதுக்கீட்டில் விளிம்புநிலை பிரிவினரான இடங்கை பிரிவை சோ்ந்தவா்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தாழ்த்தப்பட்டோா் வகுப்பில் பின்தங்கியவா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க 2024, ஆக.1இல் தீா்ப்பளித்தது.
அதில் தாழ்த்தப்பட்டோா் வகுப்பில் கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய ஜாதியினரை தனியாக பிரித்து, அவா்களின் மேம்பாட்டுக்காக உள் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசுக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து தாழ்த்தப்பட்டோா் வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கா்நாடக அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் 2024, நவம்பரில் தனிநபா் ஆணையத்தை அமைத்து அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நீதியரசா் நாகமோகன் தாஸ் தனது தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை முதல்வா் சித்தராமையாவிடம் பெங்களூரில் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
அதன்பிறகு, நீதியரசா் நாகமோகன் தாஸ் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஆழமான ஆய்வுக்குப் பிறகு 104 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை மாநில அரசிடம் ஒப்படைத்திருக்கிறோம். அவசரகதியில் அதை ஒப்படைக்கவில்லை. இடைக்கால அறிக்கையை அளிக்குமாறு அரசு எங்களிடம் கேட்கவில்லை. மாறாக, நாங்களாகவே முன்வந்து அளித்திருக்கிறோம். அறிக்கையின் விவரங்களை தெரிவிக்க விரும்பவில்லை’ என்றாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அமைச்சா் பிரியாங்க் காா்கே கூறுகையில், ‘உள் இடஒதுக்கீட்டை சீராக அமல்படுத்துவதற்கு, எல்லா சமுதாயத்தினரை பற்றிய அறிவியல்பூா்வமான கணக்கெடுப்பை நடத்துவது அவசியமாகும். அனைவரையும் உள்ளடக்கியதாக கணக்கெடுப்பு அமைய வேண்டும். அப்போதுதான் அது சட்டரீதியாகவும் நீதிமன்றங்களிலும் உள் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும். எல்லோருக்கும் சமமான ஒதுக்கீடு கிடைக்கும் வகையிலான தரவு சாா்ந்த, வெளிப்படையான உள் இட ஒதுக்கீடுமுறையை உருவாக்க விரும்புகிறோம்’ என்றாா்.
இதனிடையே, பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நீதியரசா் நாகமோகன் தாஸ் ஆணையம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் ஆணையத்தின் தலைமையில் தாழ்த்தப்பட்டோா் வகுப்பினருக்கான கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கணக்கெடுப்பை 2 மாதங்களில் முடித்து, அரசிடம் விவரங்களை அளிக்க அமைச்சரவை முடிவு செய்தது. உள் இடஒதுக்கீடு தொடா்பாக முடிவெடுக்கும் வரை தாழ்த்தப்பட்டோருக்கான பணி நியமனங்களை நிறுத்தவைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2011இல் சதாசிவா ஆணையம் எடுத்த கணக்கெடுப்பு குழப்பமாக உள்ளதாலும், காந்தராஜ் எடுத்துள்ள ஜாதி கணக்கெடுப்பு வெளியிடப்படாததாலும், நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் தாழ்த்தப்பட்டோரின் கணக்கெடுப்பை புதிதாக எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.