பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
‘போலி’ தீா்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிபதி மீது நடவடிக்கை: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு
உச்சநீதிமன்றத்தின் ‘போலி’ தீா்ப்பை மேற்கோள்காட்டி வழக்கில் தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வணிக வளாக தகராறு தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.தேவதாஸ், உச்சநீதிமன்றத்தின் ‘போலி’ தீா்ப்பை சுட்டிக்காட்டியுள்ள மாநகர சிவில் நீதிமன்றத்தின் நீதிபதி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளாா்.
இந்த வழக்கில் மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரபுலிங் நவட்கி, ‘உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக கூறப்படும் தீா்ப்பை சுட்டிக்காட்டி, எங்கள் தரப்பின் மனுவை விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளாா். நீதிபதி சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு போலியாக புனையப்பட்டுள்ளது என்பதை ஜனவரி மாதமே நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
உச்சநீதிமன்றத்தின் இணையதளம் அல்லது இதர சட்டரீதியான இணையதளங்களில் விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி சுட்டிக்காட்டிய தீா்ப்பு இடம்பெறவே இல்லை. செயற்கை நுண்ணறிவு தளங்களால் கற்பனையான வழக்குகள் தயாரிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளது’ என்று தனது வாதங்களை முன்வைத்திருந்தாா்.
அதன்பேரில், மாா்ச் 24ஆம் தேதி கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.தேவதாஸ் அளித்த உத்தரவில், ‘உச்சநீதிமன்றம் அல்லது வேறு எந்த நீதிமன்றங்களும் அளிக்காத 2 தீா்ப்புகளை மாநகர நீதிமன்றத்தின் கற்றறிந்த நீதிபதி தனது தீா்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது வேதனை அளிக்கிறது. இதுதொடா்பாக விசாரணை நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவின் அடிப்படையில் அவா் மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதியிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.