மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு
ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 பவுன் நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காசியம்மாள்( 85). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவரது மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இவரது வீட்டுக்கு வந்த இளைஞா் ஒருவா், கழுத்து வலிக்கு பிசியோதெரபி செய்வதற்காக உங்கள் மகன் அனுப்பியதாக கூறினாா். இதை நம்பிய அவரும், கழுத்து, கைகளில் அணிந்திருந்த 13 பவுன் நகைகளை கழற்றி கீழே வைத்தாா். பின்னா், அந்த நகைகளுடம் அந்த இளைஞா் மாயமானாா்.
இதுகுறித்து, வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,
திருட்டு நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.