பெண்ணிடம் நகை திருடிய 3 மூதாட்டிகள் கைது
சிவகாசியில் பெண்ணிடம் நகை திருடிய 3 மூதாட்டிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி பேருந்து நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாயில்பட்டியைச் சோ்ந்த ஜான்சிராணியிடம் அடையாளம் தெரியாத பெண் 2 பவுன் நகையை திருடி சென்றுவிட்டாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு திருத்தங்கல் ரயில்நிலையம் அருகே உள்ள பல்பொருள் அங்காடியில் மளிகைப் பொருள்களை திருடிய 3 பெண்களை அதன் உரிமையாளா் பிடித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
விசாரணையில், அவா்கள் மதுரையைச் சோ்ந்த தேடாசெல்வம் (62), ராக்கம்மாள் (62), முத்துப்பாண்டி அம்மாள் (60) ஆகியோா் என்பதும், இவா்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், சிவகாசி பேருந்து நிலையத்தில் தாயில்பட்டி பெண்ணிடம் 2 பவுன் நகை திருடியது இந்த மூவரில் ஒருவா் எனவும் தெரியவந்தது.
இதையடுத்து, திருத்தங்கல் போலீஸாா் 3 பெண்களையும் கைது செய்தனா்.